// print_r($new['title']); ?>
மக்கள் தொகை வளர்ச்சியில் இது ஒரு மைல் கல்லாக கருதும் ஐ.நா., மதிப்பீட்டின்படி, செவ்வாய்கிழமை (நவம்பர் 15) உலக மக்கள் தொகை 8 பில்லியன் அதாவது 800 கோடியை மக்களை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய கணிப்புகளின்படி, உலக மக்கள்தொகை 2030 ஆம் ஆண்டில் 8.5 பில்லியனாகவும், 2050 ஆண்டில் 9.7 பில்லியனாகவும், 2100 இல் 10.4 பில்லியனாகவும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கிறது. உலக மக்கள்தொகை தினத்தை ஒட்டி திங்களன்று வெளியிடப்பட்ட வருடாந்திர உலக மக்கள்தொகை கணிப்பு அறிக்கையில், உலக மக்கள்தொகை 1950 க்குப் பிறகு மிக மெதுவான விகிதத்தில் அதிகரித்து வருகிறது என்றும் 2020 ஆம் ஆண்டில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான அளவு வளர்ச்சி கண்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.
சராசரி ஆயுட்காலம் அதிகரிப்பது மற்றும் இறப்பு அளவு குறைவது ஆகியவை மக்கள்தொகை வளர்ச்சியைத் தூண்டும் இரண்டு முக்கிய காரணிகளாகும். உலக மக்கள் தொகை 700 கோடியிலிருந்து 800 கோடியாக அதிகரிக்க வளர 12 வருடங்கள் எடுத்துள்ளது. இருப்பினும், இது 900 கோடியை எட்டுவதற்கு தோராயமாக 15 ஆண்டுகள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டில், இரண்டு அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ஆசியாவில் இருந்தன: கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா 2.3 பில்லியன் மக்களுடன் முதல் இடத்திலும், மத்திய மற்றும் தெற்கு ஆசியா 2.1 பில்லியனுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. சீனாவும் இந்தியாவும், தலா 1.4 பில்லியனுக்கும் அதிகமாக, இந்த இரண்டு பிராந்தியங்களிலும் பெரும்பாலான மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. 2050 வரை உலக மக்கள்தொகையில் பாதிக்கும் மேலான வளர்ச்சி என்பது காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தான்சானியா ஆகிய எட்டு நாடுகளில் மட்டுமே குவிந்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
UN மதிப்பீட்டின்படி, 2023 ஆம் ஆண்டில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக சீனாவை இந்தியா விஞ்சும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகை வளர்ச்சி ஒரு பகுதியாக இறப்பு அளவு குறைவதால் ஏற்படுகிறது, இது பிறக்கும் போது ஆயுட்காலம் அதிகரிப்பதில் பிரதிபலிக்கிறது. உலகளவில், 2019 ஆம் ஆண்டில் ஆயுட்காலம் 72.8 ஆண்டுகளை எட்டியது, இது 1990 ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் அதிகரித்துள்ளது. இறப்பு விகிதத்தில் மேலும் குறைப்புக்கள் 2050 ஆம் ஆண்டில் உலகளவில் சராசரியாக 77.2 ஆண்டுகள் ஆயுளை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையில் கருவுறுதல் நிலைகளைக் கொண்ட நாடுகள், தனிநபர் வருமானம் குறைந்த நாடுகளாக இருக்கும். எனவே உலகளாவிய மக்கள்தொகை வளர்ச்சியானது காலப்போக்கில் உலகின் ஏழ்மையான நாடுகளில் அதிக அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளன, அவற்றில் பெரும்பாலானவை ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளாகும்.