// print_r($new['title']); ?>
day, 00 month 0000

உலகெங்கும் 16 கோடி குழந்தை தொழிலாளர்கள்; ஆப்கானில் மட்டும் 10 இலட்சத்துக்கு மேல்!

ஆப்கானிஸ்தானின் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதியம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில் தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றிய பின்னர் பொருளாதாரம் மேலும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் குழந்தை தொழிலாளர் தொகை தொடர்ந்தும் உயர்ந்து வருகிறது.

உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கான உதவிகளை நிறுத்தியுள்ளதால் நாட்டில் 50 வீதத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் அன்றாட உணவை பெறவே பெரும் போராட்டத்தை சந்திப்பதாக ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதியம் குறிப்பிட்டுள்ளது.

நபீலா என்ற 12 வயதுச் சிறுமி ஒருவர் ஒரு நாளைக்கு 10 மணிநேரம் அல்லது அதற்கு மேல் வேலை செய்கிறார். மண்ணை அச்சுகளில் அடைத்து செங்கல் செய்வது, செங்கற்கள் நிரம்பிய சக்கர வண்டிகளை இழுத்துச் செல்வது போன்ற கடினமான வேலைகளின் அந்தக் குழந்தை ஈடுபடுத்தப்படுகிறது. 12 வயதில் இந்தக் குழந்தை ஒரு நாளில் பாதி நேரம் செங்கல் தொழிற்சாலைகளில் வேலை செய்கிறது.

தலைநகர் காபூலுக்கு வடக்கே நெடுஞ்சாலையில் உள்ள பல செங்கல் தொழிற்சாலைகளில் இவ்வாறு அதிகளவான குழந்தை தொழிலாளர்கள் கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு நிதியம் கூறியுள்ளது.

இதேவேளை, கடந்த இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 16 கோடியாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் பாதுகாப்பு நிதியம் தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட பொருளாதார விளைவுகளினால் மேலும் 90 இலட்சம் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்களாக மாறும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதியத்தினால் சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, ஆப்கனில் மட்டும் சுமார் 10 இலட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

அங்குள்ள செங்கல் சூளைகளில் நான்கு அல்லது ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், கோடை வெப்பத்திலும் அதிகாலை முதல் இரவு வரை தங்கள் குடும்பத்தினருடன் வேலை செய்கிறார்கள். செங்கல் தயாரிப்பதற்கான அனைத்து நிலைப் பணிகளையும் அவர்கள் செய்கிறார்கள். தண்ணீர் நிரம்பிய பெரிய கான்களை இழுத்துச் செல்கின்றனர், சேறு நிறைந்த மரச் செங்கல் அச்சுகளை எடுத்துச் சென்று வெயிலில் உலர வைக்கின்றனர்.

செங்கல் சூளைகளுக்கு அருகே பாழடைந்த மண் வீடுகளில்தான் இவர்களது குடும்பங்கள் வாழ்கின்றன. இங்கு பெரும்பாலானவர்களுக்கு ஒரு நாள் உணவு என்பது தேநீரில் ஊறவைத்த ரொட்டி என்பது அதிர்ச்சியாக உள்ளது.

இந்த குழந்தைகள் தங்கள் குடும்பத்தின் தேவையை தவிர வேறு எதுவும் அறியாது வேலை செய்கிறார்கள். இவர்களில் சிலர் மட்டுமே முன்னதாக பள்ளிக்குச் சென்றுள்ளனர்.

முன்னதாக பள்ளியில் படித்த இவர்களை வேலைக்கு அமர்த்த தவிர்த்து வந்தேன். ஆனால், தலிபான்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, போரின் காரணமாக பொருளாதாரம் மோசமடைந்ததால், தனக்கு வேறு வழியில்லாமல் குழந்தைகளின் பணிக்கு அமர்த்தினேன் என செங்கல் சூளையில் தனது 5 முதல் 12 வயது வரையிலான மூன்று குழந்தைகளுடன் வேலை செய்யும் ரஹீம் என்பவர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்று அங்குள்ள ஒவ்வொரு குழந்தைகளின் பின்னணியிலும் வறுமை வாட்டிக்கொண்டிருக்கிறது. பொம்மைகள் அல்லது விளையாட்டு குறித்து கேட்டால் அவர்கள் லேசான சிரிப்புடன் கைகளை விரிக்கிறார்கள்.

கரிகளை அள்ளும் 9 வயது சிறுவனின் விருப்பம் என்னவென்று கேட்டால், ‘நல்ல உணவு வேண்டும், பள்ளிக்குச் செல்ல வேண்டும்’ என்று கூறுகிறான்.

நபீலா என்ற 12 வயது சிறுமி கடந்த 6 ஆண்டுகளாக செங்கல் சூளையில் வேலை செய்வதாகத் தெரிவிக்கிறார்.

சூளையில் 1,000 செங்கல் செய்தால் கூலியாக 4 டொலருக்கு நிகரான பணம் தரப்படுகிறது. தனி ஒரு ஆளாக செய்தால் ஒருநாள் 1,000 செங்கல்கள் உருவாக்க முடியாது. அதுவே, குழந்தைகள் உதவும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு 1,500 செங்கல் உருவாக்க முடியும் என்று அங்குள்ள தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு நிதியம் நடத்திய கணக்கெடுப்பில், குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் குடும்பங்களின் சதவிகிதம் கடந்த டிசம்பர் முதல் ஜூன் வரை 18 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக அதிகரித்துள்ளது எனத் தெரியவந்துள்ளது


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்