// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இலங்கையின் இனப்படுகொலையை பிரித்தானியா அங்கீகரிக்க வேண்டும் – அந்நாட்டு எம்.பிக்கள் கோரிக்கை!

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்க வேண்டும். அத்துடன், போர்க் குற்றங்களில் தொடர்புடைய ஸ்ரீலங்கா சிரேஷ்ட அதிகாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரித்தானிய லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் எட் டேவி மற்றும் ரிச்மண்ட் பார்க் பாராளுமன்ற உறுப்பினர் சாரா ஓல்னி ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்ட வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் கிளேவர்லிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வின் 51-ஆவது கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறுவதில் உள்ளூர் பொறிமுறை தோல்வியடைந்துள்ளதாக அவர்கள் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தங்கள் மீதான குற்றங்களை மறுப்பது, பொறுப்புக் கூறாது இழுத்தடிப்பது. தாமதப்படுத்துவது ஆகியவற்றின் மூலம் பொறுப்புக் கூறலில் இருந்து ஸ்ரீலங்கா தப்பிக்கொள்ள முற்படுவது குறித்து நாங்கள் கவலையடைகிறோம் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உரிமைகளுக்கான முன்னாள் ஐ.நா உயர் ஸ்தானிகரின் அறிக்கையில் ஸ்ரீலங்கா மீது கடும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தண்டனை விலக்குப் பெற்றுள்ளனர். கடுமையான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள் அரச உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளதை அவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சமீபத்திய வரைவுத் தீர்மானம், இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளது. எனினும் காணாமல் போனோர் அலுவலகம் (OMP) போன்ற உள்நாட்டு பொறிமுறைகளை செயற்படுத்த தீர்மானம் அழைப்பு விடுக்கிறது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். தங்களது குற்றங்களுக்கு அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்பதை இலங்கை ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு பிரிட்டன் அரசு தெளிவுபடுத்துவது மிகவும் முக்கியமானது.

அட்டூழியங்கள் தனிநபர்கள் ஈடுபட்டமைக்கான சான்றுகள் இருந்தால் அவர்களுக்கு எதிரான தடைகளை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது இன்றியமையாதது என்று அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.

ஐ.நா உயர்ஸ்தானிகரின் பரிந்துரைக்கு பிரித்தானிய அரசாங்கம் செவிசாய்க்க தவறிவிட்டதாக விமர்சனங்கள் உள்ளன. போர்க்குற்றங்கள் அல்லது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ள இலங்கை அதிகாரி மீது இதுவரை பிரித்தானியா எந்த தடையும் விதிக்கவில்லை.

இந்நிலையில் கனேடிய பாராளுமன்றத்தில் தமிழின படுகொலை அங்கீகரிக்கப்பட்டது போன்று பிரித்தானிய பாரளுமன்றமும் தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்க வேண்டும் எனவும் பிரித்தானிய லிபரல் டெமோக்ரட் கட்சியின் தலைவர் எட் டேவி மற்றும் ரிச்மண்ட் பார்க் பாராளுமன்ற உறுப்பினர் சாரா ஓல்னி ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்ட வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் கிளேவர்லிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்