// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 51ஆவது கூட்டத் தொடரில் புதிய பிரேரணை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 51ஆவது கூட்டத் தொடர் அடுத்த மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலைச் செய்வதற்கான புதிய பிரேரணை ஒன்று கொண்டுவரப்படவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டள்ளது.

இந்நிலையில்,பிரிட்டன் தலைமையில் கொண்டுவரப்படவுள்ள இந்தப் பிரேரணைக்கு அமெரிக்கா, கனடா, ஜேர்மன், வடக்கு மசிடோனியா, மலாவி, மொன்ரி நீக்ரோ ஆகிய நாடுகள் இணை அனுரணை வழங்கவுள்ளன.

மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட 46/1பிரேரணை இந்தக் கூட்டத் தொடருடன் காலாவதியாகவுள்ள நிலையில் புதிய பிரேரணை ஒன்றை மீண்டும் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு இணை அனுசரணை நாடுகள் தீர்மானித்துள்ளன.

இந்தப் பிரேரணையானது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் 2012ஆம் ஆண்டிலிருந்து நிறைவேற்றப்பட்டு வரும் பிரேரணைகளின் உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கவுள்ளதோடு விசேடமாக 46/1 பிரேரரணையின் உள்ளடகத்தில் குறிப்பிடப்பட்ட சில முக்கிய விடயங்கள் காலநீடிப்புடன் உள்ளீர்க்கப்படவுள்ளன.

குறிப்பாக, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பான சாட்சியங்களைத் திரட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 8 அங்கத்தவர்களைக் கொண்ட பொறிமுறையானது புதிய பிரேரணையிலும் உள்வாங்கப்படவுள்ளதோடு அதற்கான நிதி மற்றும் வினைத்திறனான செயற்பாடுகள் பற்றியும் குறிப்பிடப்படவுள்ளது.

அதேநேரம், இலங்கையில் அண்மையில் நடைபெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டத்துக்கு எதிரான அடக்குமுறைகள் பற்றிய விடயங்களும் உள்வாங்கப்படவுள்ளதோடு அவசரகால நிலைமை மீண்டும் பிரகடனப்படுத்தப்பட்டமை தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக புதிய சட்டம் அமுலாக்கப்படும் என்றும், அதுவரையில் அந்தத் தடைச் சட்டத்தின் கீழ் எவரையும் கைதுசெய்வதில்லை என்றும், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அதே சட்டத்தைப் பயன்படுத்தி கைதுகள் இடம்பெறுவது தொடர்பாகவும் விசேட கரிசனை கொள்ளப்படவுள்ளது.

மேலும், தமிழ் மக்களுக்கான பொறுப்புக்கூறல் விடயத்தில் எந்தவிதமான செயற்பாடுகளும் முன்னேற்றகரமானதாக இடம்பெறவில்லை என்பதோடு நீதியைக் கோரும் பயணத்தில் தொடரும் போரட்டங்கள் தொடர்பிலும் சுட்டிக்காட்டப்படவுள்ளது.

அத்துடன், தமிழ் மக்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வு பற்றிய விடமும் புதிய பிரேணையில் உள்வாங்கப்படவுள்ளதோடு, அதனை நடைமுறைச் சாத்தியமாக்குவது பற்றிய வலியுறுத்தலும் செய்யப்படவுள்ளது.

இதனை விடவும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டாலும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கபடாமையால் அதன் பின்னணி குறித்த ஆய்வொன்றை மேற்கொள்வதற்கான பரிந்துரை செய்யப்படுவதற்கும் சாத்தியமான நிலைமைகள் காணப்படுகின்றன.

இந்நிலையில், தற்போது இலங்கை குறித்த பிரேரணையின் வரைவுப் பணிகள் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளின் பங்கேற்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மெய்நிகர் வழியில் பங்கேற்று வருகின்றார்.

குறித்த வரைவுப்பணியானது விரைவில் நிறைவடையவுள்ளதோடு 51ஆவது கூட்டத்தொடர் நடைபெறும் காலப்பகுதியில் மேலதிக விடயங்கள் கவனம் செலுத்தப்பட்டு, அரசியல் மற்றும் சிவில் தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டு இறுதி செய்யப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான தலைமை பிரதிநிதியாக 2007ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வரும் ரொரி மங்கோவனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பிக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது, புதிய பிரேரணையில் உள்ளீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் மற்றும் கடந்த காலத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேணையிலிருந்து உள்ளீர்க்கப்பட வேண்டிய முக்கிய விடயங்கள் பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை குறித்த புதிய பிரேணையைக் கொண்டுவரவுள்ள பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரனை நாடுகள் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகள் ஆகியவற்றுடனும் தொடர்ச்சியான உரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன என்று சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்