கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரை இயக்கப்படும் 'யாழ்நிலா ஒடிசி' விசேட சுற்றுலா ரயில் ஆகஸ்ட் 04 ஆம் திகதி முதல் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து பெருந்தெருக்கள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் மெலும் குறிப்பிட்ட அமைச்சர்,
விசேடமாக நல்லூர் திருவிழாவில் கலந்து கொள்ளும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு இந்து பக்தர்களுக்கு பெரும் உதவியாக இச்சேவை அமையும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
காங்கேசன்துறை - வவுனியா இருந்து கல்கிசைக்கு முதலாம் வகுப்பு ரூ.4000.00, இரண்டாம் வகுப்பு ரூ.3000, மூன்றாம் வகுப்பு ரூ.2000 வரை அறவிடப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.
அநுராதபுரத்திலிருந்து ஓமந்தை வரையான புகையிரத பாதை முற்றிலும் புனரமைக்கப்பட்டதன் பின்னர் காங்கேசன் துறை வரைமணிக்கு 100 கிலலோ மீட்டர் வேகத்தில வேகமாகவும், பாதுகாப்பாகவும், நம்பிக்கையுடனும் பயணிக்கும் வாய்ப்பு தற்போது உருவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
குளிரூட்டப்பட்ட சொகுசு ரயில் கல்கிசையில் இருந்து நான்காம் திகதி இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.30 மணிக்கு காங்கேசன் துறையை சென்றடையும் என அமைச்சர் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 06 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்படும் இந்த ரயில், மறுநாள் காலை 5:20 மணிக்கு கொழும்பை வந்தடையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 18 முதல் தினமும் இந்த ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், ஆசன வசதிகளை ஒன்லைன் பதிவு மூலமும் பதிவு செய்யலாம் எனவும் கூறினார்.
ஒரு பயணத்திற்கான டிக்கெட்டின் விலை 4000 ரூபாய் என குறிப்பிட்ட அமைச்சர், இந்த ரயில் டிசம்பர் 31ம் திகதி வரை தொடர்ச்சியாக இயங்கும் எனவும் தெரிவித்தார்.
புதிய இரவு நகர்சேர் கடுகதி புகையிரதம் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரையும் ஞாயிறு இரவு 9.30 இற்கு காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை வரையும் சேவையில் ஈடுபடும்.
5 மாதங்களின் பின்னர் எதிர்வரும் ஜனவரி 01ஆம் திகதி முதல் அநுராதபுரம் மற்றும் மஹவைக்கிடையிலான ரயில் பாதையை நவீன மயப்படுத்துவதற்காக இந்த ரயிலை குறுகிய காலம் நிறுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.