ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து விலகி இருக்கும் சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து, வலுவான கட்சியாக அடுத்த தேர்தலில் போட்டியிட உள்ளதாக அந்த கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கட்சியின் ஆலோசகரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடனும் கட்சியை ஒன்றிணைப்பது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
சிறிமாவே பண்டாரநாயக்க கட்சியை பிளவுப்பட இடமளிக்காது பாதுகாத்தார். மிக கடினமான சந்தர்ப்பங்களில் கட்சியை பாதுகாக்க நானும் அவருக்கு உதவினேன்.
தற்போதும் கட்சிக்குள் பிரச்சினைகள் உருவாகியுள்ள போதிலும் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து கட்சியை முன்நோக்கி கொண்டு செல்லும் அடித்தளத்தை இட்டுள்ளோம்.
கட்சியில் உயர் பதவிகளை வகித்து வந்த நிமல் சிறிபால டி சில்வா உள்ளிட்டோர் அரசாங்கத்தில் இணைந்துக்கொண்டு பதவிகளை பெற்றுக்கொண்டதால், அவர் உட்பட சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனினும் அதற்கு எதிராக நிமல் சிறிபால டி சில்வா சட்ட நடவடிக்கை எடுத்தார்.
அந்த வழக்கு தோல்வியடைந்த போதிலும் மேன்முறையீட்டு நீதிமன்றம், அவர்கள் அனைவரும் வகித்து வந்த பதவிகளை வழங்கி அதிகாரங்களை பகிருமாறு தீர்ப்பு வழங்கியது எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.