வேகமாகவும் திறனுடனும் பயணித்தால் மாத்திரமே கடன் சுமைகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்க முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சர்வதேச நாடுகள் எதிர்க்கொண்டிருக்கும் சமகால நெருக்கடிகளுக்கு தீர்வினைக் காணும் வகையில், பிரான்ஸின் பரிஸ் நகரில், புதிய உலகலாவிய நிதி ஒப்பந்தம் எனும் தொனிப்பொருளில் மாநாடு இடம்பெற்றது.
நேற்று ஆரம்பமான இந்த மாநாட்டில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையொன்றை நிகழ்த்தியிருந்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
ஐ.எம்.எப்.பின் கடனுதவித் திட்டம் கிடைக்கும் முன்னர் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வது சிறப்பாக இருக்கும் என்றும் இதுதொடர்பாக வழிமுறையொன்றை ஏற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், கடன் வழங்குநர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதானது நாட்டின் ஸ்திரத்தன்மைக்கும் ஐ.எம்.எப். உடனான இலங்கையின் செயற்பாட்டுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அத்தோடு, பொது வேலைத்திட்டத்தின் கீழ் நாம் வேகமாக பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஜனாதிபதி, மத்திய வருமானம் கொண்ட நாடு என்ற வகையில், திறனாகவும் வேகமாகவும் பயணித்தால் மட்டுமே கடன் சுமையிலிருந்து மீள முடியும் என்றும் தெரிவித்தார்.
தற்போது கடன் வழங்குநர் நாடுகளுடன் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதற்கு பரிஸ் கிளப் உறுப்பு நாடுகள் உள்ளிட்ட கடன் வழங்கிய ஏனைய நாடுகளை இணைப்பதுதான் முக்கியமானதாக இருந்தது என்றும் குறிப்பிட்டார்.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் இந்தியா, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகள் பங்கேற்றன என்றும் சீனா இதில் அவதானிப்பு மட்டத்தில் எமக்கான ஒத்துழைப்பை வழங்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதேநேரம், இதன்போது தகவல்கள் மற்றும் புள்ளிவிபரங்களை இந்நாடுகளுடன் பகிர்ந்துக் கொண்டதாக தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்திற்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.