// print_r($new['title']); ?>
day, 00 month 0000

’கடவுளுக்கே விளக்கமளிப்பார் பிரதமர் மோடி ’-ராகுல் காந்தி பேச்சுக்கு பா.ஜ.க பதிலடி

“கடவுள் வந்து பிரதமர் பக்கத்தில் உட்கார்ந்தால், ‘பிரபஞ்சம் எப்படி செயல்படுகிறது' என கடவுளிடம் விளக்கத் தொடங்கிவிடுவார் பிரதமர்” என அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசியதற்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

இன்று 6 நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி " எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்பது போல நாம் இருக்கக்கூடாது’’ என பல சிந்தனையாளர்கள் கூறியுள்ளனர். ஆனால், இந்தியாவில் சிலர் அப்படி உள்ளனர். பிரதமர் மோடியும் அப்படிப்பட்ட ஒருவர்தான். கடவுள் வந்து பிரதமர் மோடி பக்கத்தில் வந்து உட்கார்ந்தால், பிரபஞ்சம் எப்படி செயல்க்படுகிறது எனக் கடவுளிடம் விளக்கத் தொடங்கி விடுவார் பிரதமர். நாம் என்ன உருவாக்கி வைத்துள்ளோம் என கடவுளே யோசிப்பார்’’எனப் பேசினார்.

இதற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், ’’பிரதமர் மோடியின் சமீபத்திய வெளிநாட்டுப் பயணங்களின் போது அவரைப் பாராட்டியதையும், அவரக்கு கிடைத்த மரியாதையையும் காங்கிரஸ் தலைவரால் ஜீரணிக்க முடியவில்லை’’எனத் தெரிவித்துள்ளார்.

மூன்று நகரங்களுக்கு பயணம் செய்த அவர் தனது முதல் உரையில், ’’அரசியல் செய்யும் அனைத்து கருவிகளும் (மக்களுடன் தொடர்புகொள்வது) ’கட்டுப்படுத்தப்படுவதால்’தான் 'பாரத் ஜோடோ யாத்ரா' தொடங்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு, நாங்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணத்தைத் தொடங்கினோம். நடைப்பயணத்தின் போது (மக்களுடன் தொடர்புகொள்வதற்கான) சாதாரண கருவிகள் வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்தோம். அவை பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸால் கட்டுப்படுத்தப்பட்டன. மக்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். ஏஜென்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. அவர்களுக்கு எதிராக, ஏதோ ஒரு வகையில், அரசியல் ரீதியாக செயல்படுவது மிகவும் கடினமாகிவிட்டது. அதனால்தான் இந்தியாவின் தென்கோடியில் இருந்து ஸ்ரீநகர் வரை நடக்க முடிவு செய்தோம்" என்று ராகுல் காந்தி கூறினார்.

பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி, "இந்தியாவில் சில குழுக்கள் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தில் உள்ளனர். இந்தியாவில் பல்வேறு மொழிகள், பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களுடன் வளர்ந்தோம். அதுதான் தாக்கப்படுகிறது. காந்திஜி, குருநானக் போன்றோரின் இந்தியாவில் உள்ள பாரம்பரியம் எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தில் இருக்கக் கூடாது என்பதுதான். இந்தியாவின் சில குழுக்கள் தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பது ஒரு 'நோய்'. கடவுளுடன் உரையாடுங்கள், அவர்கள் அவருக்கு விளக்கலாம்.

நிச்சயமாக, பிரதமரும் அவர்களில் ஒருவர். நீங்கள் அவரை கடவுளுடன் உட்கார வைத்தால், அவர் கடவுளுக்கு பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கத் தொடங்குவார். நான் எதை உருவாக்கினேன் என்பதில் கடவுள் குழப்பமடைவார். பா.ஜ.க-வினர் விஞ்ஞானிகளிடம் பேசலாம், அவர்களுக்கு அறிவியலை விளக்கலாம். வரலாற்றாசிரியர்களுக்கு வரலாற்றை விளக்கலாம், ராணுவத்திற்கு போர் புரியலாம், விமானப்படையுடன் பறப்பார்கள். ஆனால், அவர்களுக்கு எதுவும் தெரியாது’’ எனத் தெரிவித்தார்.

இந்த கருத்துக்கு ஆளும் பா.ஜ.க-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளிநாட்டில் இந்தியாவை அவமதித்ததாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டினார். "ராகுல் காந்தி தனது வெளிநாட்டுப் பயணங்களின் போது, இந்தியாவை அவமதிக்கிறார். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவர் பிரதமர் மோடியை அவமதிக்க விரும்புகிறார். ஆனால் இந்தியாவை அவமதித்து, இந்தியாவின் முன்னேற்றத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறார். வளர்ந்து வரும் நமது அந்தஸ்தை உலகமே அங்கீகரிக்கும் நேரத்தில் அவர் இந்தியாவை களங்கப்படுத்த முயற்சிக்கிறார்" என தாக்கூர் கூறினார்.

"பிரதமர் மோடி சமீபத்தில் தனது வெளிநாட்டு பயணத்தின் போது உலகின் 24 பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகளை சந்தித்து 50 க்கும் மேற்பட்ட சந்திப்புகளை நடத்தினார். பல உலக தலைவர்கள் மோடி மிகவும் பிரபலமான தலைவர் என்று கூறுகிறார்கள். "பிரதமர் மோடி தான் பாஸ்" என்று ஆஸ்திரேலிய பிரதமர் கூறியபோது, ராகுல் காந்தியால் இதை ஜீரணிக்க முடியவில்லை” என்றும் அவர் கூறினார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்