// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ஐபிஎல் இறுதிப் போட்டியில் பத்தாவது தடவையாக தோனியின் சென்னை

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (23) இரவு நடைபெற்ற முதலாவது தகுதிகாண் (அரை இறுதி) போட்டியில் நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸை  15 ஓட்டங்களால் வெற்றிகொண்ட முன்னாள் சம்பியன் சென்னை சுப்பர் கிங்ஸ் 10ஆவது தடவையாக ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

நான்கு தடவைகள் சம்பியனான தோனியின் தலைமையிலான சென்னை மீண்டும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியதும் வானவெடிகள் போடப்பட்டு மகிழ்ச்சி வெளியிடப்பட்டது.

துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகிய மூன்று துறைகளிலும் அபரிமிதமான ஆற்றல்களை வெளிப்படுத்தியதன் மூலம்  சென்னை சுப்பர் கிங்ஸ் அபார வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இலங்கை பந்துவீச்சாளர்களான மதீஷ பத்திரன, மஹீஷ் தீக்ஷன ஆகிய இருவரும் சிறப்பாக பந்துவீசியதுடன் அவசியமான வேளையில் தலா ஒரு பிடியை எடுத்தமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயங்களாகும்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.

ருத்துராஜ் கய்க்வாட், டெவன் கொன்வே ஆகிய இருவரும் 87 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்ததால் சென்னை சுப்பர் கிங்ஸினால் சுமாரான மொத்த எண்ணிக்கையையே பெற முடிந்தது. கய்க்வாட் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்தார்.

ஆரம்ப விக்கெட்டுக்கான இணைப்பாட்டத்துக்கு அடுத்ததாக 3ஆவது விக்கெட்டில் அஜின்கியா ரஹானே, டெவன் கொன்வே ஆகியோர் பகிர்ந்த 31 ஓட்டங்களே இரண்டாவது சிறந்த இணைப்பாட்டமாக இருந்தது.

குஜராத் பந்துவீச்சில் மொஹமத் ஷமி, மோஹித் ஷர்மா ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

173 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 157 ஓட்டங்களைப் பெற்றது.

வழமையாக அதிரடி மூலம் ஓட்டங்களைக் குவிக்கும் ஷுப்மான் கில், ஹார்திக் பாண்டியா, டேவிட் மில்லர், விஜய் ஷன்கர் ஆகிய அனைவரும் அவசரமான, தவறான அடி தெரிவுகள் மூலம் ஆட்டம் இழந்தனர்.
குஜராத் இன்னிங்ஸில் 30 ஓட்டங்களுக்கு மேற்பட்ட ஓட்டங்களைக் கொண்ட 2 இணைப்பாட்டங்களே பதிவாகின.

ஷுப்மான் கில், தசுன் ஷானக்க ஆகியோர் 3ஆவது விக்கெட்டில் 31 ஓட்டங்களையும் விஜய் ஷன்கர், ராஷித் கான் ஆகியோர் 7ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களையும் பகிர்ந்தனர்.
இதனிடையே ஷுப்மான் கில் இந்த வருட ஐபிஎல் அத்தியாத்தில் அதிகூடிய மொத்த ஓட்டங்களைப் பெறுவதற்கு 9 ஓட்டங்களால் தவறினார்.

பவ் டு ப்ளெசிஸ் 14 போட்டிகளில் குவித்த 730 ஓட்டங்களை விட 8 ஓட்டங்கள் குறைவாக 722 ஓட்டங்களை கில் மொத்தமாக பெற்றுள்ளார். அவருக்கு இன்னும் ஒரு போட்டி அல்லது 2 போட்டிகள் இருப்பதால் ப்ளெசிஸின் மொத்த எண்ணிக்கையைக் கடப்பார் என கருதப்படுகிறது.

இதேவேளை, இப் போட்டி முடிவை அடுத்து குஜராத் டைட்டன்ஸ் மற்றொரு தகுதிகாண் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறுகிறது. லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸுக்கும் மும்பை இண்டியன்ஸுக்கும் இடையில் புதன்கிழமை (24) நடைபெறவுள்ள நீக்கல் போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் இரண்டாவது தகுதிகாண் (அரை இறுதி) போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் விளையாடும்.

எண்ணிக்கை சுருக்கம் (முதலாவது தகுதிகாண்)

சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில்

172 (ருத்துராஜ் கய்க்வாட் 60, டெவன் கொன்வே 40, ரவிந்த்ர ஜடேஜா 22, அஜின்கியா ரஹானே 17, அம்பாட்டி ராயுடு 17, மொஹமத் ஷமி 28 - 2 விக்., மோஹத் ஷர்மா 31 - 2 விக்.)

குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் சகலரும் ஆட்டம் இழந்து 157 (ஷுப்மான் கில் 42, ராஷித் கான் 30, தசுன் ஷானக்க 17, விஜய் ஷன்கர் 14, ரவிந்த்ர ஜடேஜா 18 - 2 விக், மஹீஷ் தீக்ஷன 28 - 2 விக்., தீப்பக் சஹார் 29  - 2 விக்., மதீஷ பத்திரண 37 - 2 விக்.)


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்