ஓசாகா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் விருது விஜய்க்கு வழங்கப்படவிருக்கிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த நடிகராக இருக்கிறார் நடிகர் விஜய். தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்துவருகிறார். விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பெரும் வெற்றியைப் பதிவு செய்தது.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் லியோ படத்துக்கு இந்திய அளவில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மிகப்பெரும் பொருட் செலவில் உருவாகிவரும் இந்தப் படத்தில் இந்திய அளவில் பிரபலமான சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்தப் படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.
இதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 25வது படமாக இது உருவாகும் இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படம் சர்வதேச தரத்துடன் உருவாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் ஜப்பானின் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது நடிகர் விஜய்க்கு மாஸ்டர் படத்துக்காக வழங்கப்படவுள்ளது. மேலும் தலைவி படத்துக்காக சிறந்த நடிகை விருது கங்கனா ரணாவத்துக்கும், சிறந்த படமாக சார்பட்டா பரம்பரை படத்துக்கும் சார்பட்டா பரம்பரை படத்துக்காக சிறந்த இயக்குநர் விருது இயக்குநர் பா.ரஞ்சித்துக்கும், மாநாடு படத்துக்காக சிறந்த இசையமைப்பாளர் விருது யுவன் ஷங்கர் ராஜாவுக்கும், ஜெய் பீம் படத்துக்காக சிறந்த துணை நடிகர் விருது மணிகண்டனுக்கும் மாநாடு படத்துக்காக சிறந்த திரைக்கதை விருது இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் வழங்கப்படவிருக்கிறது.