கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உலகிலிருந்து ஒழிக்கப்படும் வரை நாட்டை மூடிவைக்க முடியாது. யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அனைவரும் செயற்பட வேண்டும். சுமார் 40 நாட்கள் மூடப்பட்டிருந்த பிரதேசங்களிலும் நாளாந்தம் தொற்றாளர்கள் பதிவாகின்றனர். இதிலிருந்து தெரியவருவது பிரதேசங்களை மூடிவைப்பதால் மட்டும் நோய்த்தொற்றை ஒழிக்க முடியாது என்பதாகும்என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற கொரோனா ஒழிப்பு விசேட செயலணியினருடனான கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு மத்தியில் எமக்கு மேற்கொள்ள முடியுமான மாற்று வழிகள் 3 உள்ளன. ஒன்று ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்து முழு நாட்டையும் முடக்குவது. இரண்டாவது எதனையும் செய்யாதிருப்பது. மூன்றாவது நோயைக் கட்டுப்படுத்தும் அதேநேரம் நாட்டை வழமை போன்று பேணிச் செல்வதாகும். நாம் தற்போது மூன்றாவது மாற்று வழியைத் தெரிவுசெய்திருக்கின்றோம்.
கொரோனாவை ஒழிக்க இலகுவான விடயம் நாட்டை மூடி வைப்பதாகும். எனினும், மக்கள் வாழ வேண்டும். தொழில்கள், விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைககளிலும் ஈடுபட்டு பொருளாதாரத்தைப் பாதுகாப்பது எனது பொறுப்பாகும்.
பி.சி.ஆர். பரிசோதனைக்காக அரசு நாளொன்றுக்கு 60 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் செலவிடுகின்றது. தனிமைப்படுத்தல் உள்ளிட்ட அனைத்துச் செயற்பாடுகளுக்கும் நாளாந்தம் பெருந்தொகை செலவிடப்படுகின்றது. மக்கள் இந்த நிலைமையைப் புரிந்துகொண்டு நோய்த்தொற்றுக்கு ஆளாவதிலிருந்து தவிர்ந்திருப்பது அவர்களது தனிப்பட்ட பொறுப்பும் கடமையுமாகும்.