இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொண்ட கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் நாட்டின் இறைமையையே அடகு வைக்கும் நிலைக்குச் சென்றுள்ளது என ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனால், இலங்கைத் தீவிலும் இந்துமகா சமுத்திரப் பிராந்தியத்திலும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை என்பது இப்பொழுது பாரிய விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் சீன உயர்மட்டக் குழுவின் வருகையும், அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மைக்பொம்பியோ வரவிருப்பதும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
அத்துடன், இந்திய – இலங்கை பிரதமர்களுக்கிடையிலான காணொளித் தொடர்பாடல் மூலமான பேச்சுவார்த்தைகளும் ஊடகங்களில் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மாறிமாறி வந்த இலங்கை அரசாங்கங்களின் தமிழர் விரோத உள்நாட்டுக் கொள்கைகளும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வெளிநாட்டு உதவிகளும் இலங்கையை ஏற்கனவே பொருளாதார ரீதியாக படுபாதாளத்தில் தள்ளியிருக்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஈழத் தமிழர் பிரச்சினை என்பது ஒரே நாட்டிற்குள் அவர்களுக்கான ஒரு சுயாட்சியைக் கொடுப்பதனூடாக இலகுவாகத் தீரத்திருக்க முடியும் என்றும், ஆனால் மாறாக, தமிழினத்தை அழித்தொழிக்கக்கூடிய ஒரு பாரிய யுத்தத்திற்கு மூலகாரண கர்த்தாக்களாக அரசாங்கமே இருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த யுத்தத்தை நடத்துவதற்கு சர்வதேச ரீதியாக இவர்கள் பெற்ற கடனும் அதனைத் திருப்பிச் செலுத்த முடியாத பொருளாதார வங்குரோத்து நிலைமைகளும் சீனாவின் எண்ணத்தை ஈடேற்றுவதற்கு இலங்கையை நிர்ப்பந்தித்துள்ளது.
இந்நிலையில், சீனாவிடம் மேலும் கடனைப் பெற்றுக்கொள்ள முயல்வதும் நாங்கள் கடன்பொறிக்குள் விழவில்லை என்று நாட்டு மக்களை ஏமாற்ற முயல்வதுமே தற்போது நடைபெறுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தமிழ் தேசிய இனப் பிரச்சினையை ஒன்றுபட்ட இலங்கைத் தீவிற்குள் தீர்ப்பதற்கு ஒரு சமஷ்டி அமைப்பினூடாக அதனைச் சாத்தியமாக்கலாம் என்று தமிழ் பிரதிநிதிகள் கூறும்போது அது இலங்கையின் இறையாண்மைக்கு பேராபத்தாக அமைந்துவிடும் என சிங்களத் தரப்புக்கள் குரல் கொடுக்கின்றன.
இவ்வாறிருக்கையில், இலங்கையின் முக்கியத்துவம் வாய்ந்த பல பகுதிகளை தொண்ணூற்றொன்பது வருட குத்தகைக்கு விடுவதும் விலைபேசி விற்பதும் இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்தாகாதா என்பதை சிங்கள பெரும்பான்மை மக்கள் உள்ளிட்ட இந்நாட்டு மக்கள் அனைவரும் உணர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.