கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களைப் புதைப்பதற்கு இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத் தகவலை சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார இன்று தெரிவித்தார்.
கொரோனாத் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.
கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கியுள்ளார் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார் என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புக்கள் தெரிவித்திருந்தன.
ஜனாதிபதியின் இந்தத் தீர்மானத்துக்கு இஸ்லாமிய அமைப்புக்கள் தமது நன்றிகளையும் வெளியிட்டிருந்தன.
கொரோனாத் தொற்றால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் ஜனாஸாக்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்வது குறித்தும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய குறித்த ஜனாஸாக்கள் மன்னாரில் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய ஆராயப்படுகின்றது எனவும் கூறப்பட்டிருந்தது.