ஐ.நா. அங்கத்துவ நாடுகளை சாட்சியாக வைத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் விலகமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
ஜெனீவாவில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான கடப்பாட்டிலிருந்து இலங்கை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொண்டதிலிருந்து மனித உரிமைகள் குறித்து கொண்டிருக்கக்கூடிய பொறுப்புக்களை தொடர்ச்சியாக மறுதலித்து வருவது கவலையடையச் செய்வதாக அவர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, இது குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல, ஐக்கிய நாடுகள் சபை கூறுகின்ற அனைத்தையும் கவனத்திலெடுக்க வேண்டும் அல்லது அவற்றுக்கமைவாக செயற்பட வேண்டும் என்ற அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்று குறிப்பிட்டார்.
இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.
“இலங்கையில் இறுதிக்கட்டப்போரின்போது போர்க்குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றன என்பதற்குக் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையிலேயே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை 2015 ஆம் ஆண்டில் வெளிவிவகார அமைச்சராக இருந்த மங்கள சமரவீர ஏற்றுக்கொண்டார்.
எனவே சர்வதேச கட்டமைப்பொன்றில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானமொன்றை ஒரு அரசாங்கம் ஏற்றுக்கொள்வதும் பிறிதொரு அரசாங்கம் ஏற்கமுடியாது என்று கூறுவதும் நாட்டின் மீதான நன்மதிப்பிற்கு குந்தகத்தை ஏற்படுத்துவதாகவே அமையும்.
அதுமாத்திரமன்றி தன்னிச்சையாக வெளியிடப்படுகின்ற இத்தகைய ஒருதலைப்பட்சமான அறிவிப்புக்கள் ஒரு செய்தியாக ஏற்றுக்கொள்ளப்படவும் முடியாதவையாகும்.
அத்தோடு, சிவில் நிர்வாகத்தின் முக்கிய பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமிப்பதன் ஊடாக நாட்டில் ‘நவீன இராணுவ ஆட்சி’ ஒன்றை உருவாக்குவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை.
அதற்கு எமது முழுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் வெளியிட்டிருக்கும் கருத்தை வாஞ்சையுடன் வரவேற்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.