சர்வதேச அமைப்புகளின் விவாதங்களில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
இந்தியா-இலங்கை இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து இரு நாடுகளின் பிரதமர்களும் கடந்த 26-ம் திகதி இணையவழியில் பேச்சு நடத்தினர். அப்போது, இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 13-வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளித்தல், போருக்குப் பிந்தைய சமாதான முயற்சிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத் தமிழர்கள் சமத்துவம், நீதி, அமைதி, மரியாதை ஆகியவற்றுடன் வாழ வகை செய்ய வேண்டும் என்று இலங்கை பிரதமர் ராஜபக்சவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
அதையேற்ற இலங்கை பிரதமர் ராஜபக்ச, இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவுகளை முழுமையாக செயல்படுத்துவதன் மூலம் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இன மக்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற தமது அரசு நடவடிக்கை எடுக்கும் என மோடியிடம் உறுதியளித்து இருந்தார். இரு நாடுகளின் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இந்த அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.
ஆனால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான பேச்சுகளுக்குப் பிறகு இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கையில், ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்பது குறித்தோ, இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் 13-வது சட்டத் திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துவது குறித்தோ எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.
எனவே, இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல்கள், ஈழத்தமிழர்களுக்கு போதிய அதிகாரம் வழங்குதல் ஆகியவற்றில் இந்தியா கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். பன்னாட்டு அமைப்புகளில் இது குறித்த விவாதங்களும், விசாரணைகளும் வரும் போது, இலங்கைக்கு எதிரான, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டும். அதன்பிறகும் இலங்கையின் போக்கு மாறாவிட்டால், இறுதித் தீர்வாக ஐக்கிய நாடுகள் அவையின் மூலம் தனித்தமிழீழம் அமைக்க உலகம் முழுவதும் ஈழத்தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஏற்பாடு செய்ய வேண்டும்.