20வது திருத்த வரைபுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் இன்று (29) விசாரணைகள் ஆரம்பிக்கிறது.
பிரதம நீதியரசர் தலைமையிலான 5 நீதியரசர்கள் ஆயம் விசாரணையை மேற்கொள்ளும்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20வது திருத்த வரைபிற்கு எதிராக இதுவரை 39 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பிரதான கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் ரட்னஜீவன் கூல், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன், 20வது திருத்தத்தை மேற்கொள்ள சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்றும் மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூரிய, நீதிபதிகள் புவனேக அலுவிஹார, நீதிபதி சிசிர டி அப்ரூ, நீதிபதி பிரியந்த ஜெயவர்தன, நீதிபதி விஜித் மலல்கொட ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட ஆயம் முன் விசாரிக்கப்படும்.
கடந்த 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் 20வது திருத்தத்தை நீதியமைச்சர் அலி சப்ரி தாக்கல் செய்தார். அதை சவாலுக்கு உட்படுத்த ஒரு வார அவகாசமுள்ளது. இன்றிலிருந்து 21 நாட்களிற்குள் உயர்நீதிமன்றம் தனது முடிவை அறிவிக்கும்.