விக்னேஸ்வரனை போன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தத்தமது கருத்துக்களை தெரிவிக்க உரிமை உண்டு என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (27) ஆரம்பமான பாராளுமன்ற அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் கடந்த 20 ஆம் திகதி ஆற்றிய உரை தொடர்பில் மீண்டும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இதற்கமைய மீண்டும் இன்று உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்கார, அவரின் சர்ச்சைக்குரிய உரையை ஹென்சாட்டில் இருந்து அகற்றுமாறு கோரினார்.
இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இதற்கு முன்னர் இவ்வாறான சர்ச்சையான கருத்துக்கள் ஹென்சாட்டில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் அதேபோல் விக்னேஸ்வரனின் உரையையும் அகற்றுமாறு கோரினார்.
இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்றத்தில் அனைவருக்கும் கருத்து தெரிவிக்க உரிமையளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாட்டின் சட்டம் மீறப்பட்டிருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார, விக்னேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்ட போது தெரிவித்த கருத்துக்களுக்கு முரணாக செயற்பட்டுள்ளதாக கூறினார்.
விக்னேஸ்வரனின் கருத்தால் இவ்வாறு பாராளுமன்றில் வாதபிரதிவாதங்கள் இடம்பெற்ற போது சபாநாயகர் தலையிட்டு விக்னேஸ்வரனை போன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தத்தமது கருத்துக்களை தெரிவிக்க உரிமை உண்டு என தெரிவித்தார்.