விக்னேஸ்வரனின் உரையை ஹென்சாட்டில் இருந்து நீக்கினால் சர்வதேச சமூகத்திடம் முறையிடுவோம் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதேபோல் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்திடமும், கொமென் வெல்த் பாராளுமன்ற ஒன்றியத்திடமும் இதுகுறித்து முறையிடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேற்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் இதனை கூறினார்.
பாராளுமன்றத்தில் சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி ஆற்றிய உரை சிங்கள இனவாதிகளை கொதித்தெழ வைத்துள்ளது. எங்களுடைய வரலாற்றை எங்களுடைய விருப்பங்களை நாம் தெரிவிப்பது அவர்களுக்கு கொதிப்பினை ஏற்படுத்துகிறதென்றால் எங்களை விட்டுவிடுங்கள். நீங்கள் உங்களுடைய பாட்டிலே செல்லுங்கள் நாங்கள் எங்களுடைய வழிகளை பார்த்துக் கொள்கின்றோம் என எண்ணத் தோன்றுகின்றது
அது மூத்த குடிமக்களினுடைய மொழி என உரையாற்றிய போது கூக்குரலிடுவதும் நாடாளுமன்ற பதிவேட்டில் இருந்து நீக்குவதை பரிசீலிப்பதாக சபாநாயகர் கூறுவதும் கீழ்த்தரமான ஒரு ஜனநாயக முறைக்கு விரோதமான செயற்பாடாகவே நான் கருதுகின்றேன்.
நீக்குவதோ வைத்திருப்பதோ எதுவாக இருந்தாலும் எமது மூத்த மொழி மூத்த மொழியாகவே தான் இருக்கும். அவ்வாறு குறித்த உரையை நீக்கினால் நாங்கள் சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியத்திடமும் அதேபோல கொமென் வெல்த் நாடாளுமன்றத்த ஒன்றியத்திடமும் சர்வதேச சமூகத்திடமும் முறையிடுவோம் என்றார்.
தமிழ் மொழியே இலங்கையின் தொன்மையான மொழி எனவும் தமிழ் இனமே ஆதி குடிகள் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.
கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற கன்னி அமர்வில் சபாநாயகருக்கு வாழத்து தெரிவித்து ஆற்றிய உரையின் போதே விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த பின்புலத்தில் அவரின் உரை பாராளுமன்ற ஹென்சாட்டில் இருந்து நீக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்கார அடுத்த நாள் கோரினார்.
இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் தெரிவித்திருந்தார்.
ஆனால் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனின் உரை பாராளுமன்ற ஹெட்சாட்டில் இருந்து இதுவரை அகற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.