தமிழ்த் தேசிய மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் உண்மையை உரைத்ததாலேயே பேரினவாதிகள் கூச்சலிடும் நிலை ஏற்பட்டுள்ளது என அக்கூட்டணியின் பொதுச் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
9ஆவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப நாளன்று சபாநாயகருக்கான கட்சித் தலைவர்கள் வாழ்த்துரையின்போது தமிழ் மக்கள் பூர்விக குடிகள், தமிழ் மொழி தொன்மையானது என சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
இந்தக் கருத்துக்கு தென்னிலங்கையில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக சிவசக்தி ஆனந்தன் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மொழியானது உலகத்தில் உள்ள மிகத் தொன்மையான மொழிகளில் ஒன்றாகும். அதேபோன்று உலகத்தில் உள்ள இனங்களில் தமிழினத்திற்கும் தொன்மையான வரலாறுகள் காணப்படுகின்றன.
இந்தப் பின்னணியில் இலங்கையினை எடுத்துக்கொள்கின்றபோது இலங்கையின் தமிழர்கள் ஆதிக்குடிகள் என்பதற்கும் தமிழ் மொழி பழம்பெரும் மொழி என்பதற்கும் ஆயிரமாயிரம் சான்றாதாரங்கள் காணப்படுகின்றன.
ஆனால் அவற்றை மாகாவம்சம், சூலவம்சம் போன்ற வரலாற்று நூல்களைப் பயன்படுத்தி முழுமையாக திரிபுபடுத்தியுள்ளவர்கள் பேரினவாதச் சிங்களவர்களே.
அதுமட்டுமன்றி தற்போதும்கூட, தமிழர்களின் பூர்வீகத் தாயகமான வடக்கு, கிழக்கின் வரலாற்றை மாற்றுவதற்கான திட்டமிடல்களே முன்னெடுக்கப்படுகின்றன.
தமிழர்களை வந்தேறு குடிகளாக சித்தரித்து இலங்கையை முழுமையான சிங்கள, பௌத்த நாடாக பிரகடனப்படுத்துவதே பேரனவாதிகளின் நிகழ்ச்சி நிரலாக இருக்கின்றது. அதன் ஒரு அங்கமாகவே, கிழக்கு மாகாணத்திற்கான தொல்பொருள் ஜனாதிபதி செயலணி அதற்கு முழுமையான ஆதாரமாக அமைகின்றது.
இவ்வாறு தமிழினத்தின் அடையாங்களை அழித்து, பூர்வீக நிலங்களை கையகப்படுத்தி பௌத்த, சிங்கள சித்தாந்தத்தினை நிறுவுவதற்கு விளைந்து வருகின்ற ஆட்சியாளர்களுக்கு தமிழர்களும் தமிழும் பூர்வீகமும் தொன்மையும் கொண்டது என்ற உண்மையைக் கூறுகின்றபோது, அது கசக்கவே செய்யும். அதன் வெளிப்பாடாகவே தென்னிலங்கையில் விக்னேஸ்வரனுக்கு எதிரான கூச்சல்கள் அதிகரித்துள்ளன.
கூச்சல்களுக்கும் எதிர்ப்புக்களுக்கும் அச்சப்பட்டு உண்மைகளை வெளிப்படுத்தாமல் இருக்க முடியாது. தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கான பணியை விக்னேஸ்வரன் தொடர்ந்தும் முன்னெடுப்பதில் பின்னடிப்புக்களைச் செய்யமாட்டார் என்பது உறுதியான விடயமாகும்.
அதேவேளையில், பொதுத்தேர்தல் நிறைவடைந்தவுடன் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை தேவை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்தது.
ஆனால், தமிழரின் இருப்பு தொடர்பான கூற்றால் தனி நபரை இலக்கு வைத்து தென்னிலங்கை தரப்புக்கள் தாக்குதல் நடத்த ஆரம்பித்திருக்கின்ற நிலையில், மௌனமாக இருந்து கொண்டிருக்கின்றது.
இதன்மூலம் ஒற்றுமைக்கான அழைப்பின் பின்னணி சுயலாப அரசியல் என்பதும் தமிழினத்தின் இருப்பை அழிக்கும் வரலாற்று தொன்மை மாற்றப்படுவதில் கரிசனையே இல்லை என்பதும் அப்பட்டமாக வெளிப்பட்டிருக்கின்றது” என தெரிவித்துள்ளார்.