கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து குறித்த விவரங்களை சீனா அதிகாரப்பூர்வமாக உலகிற்கு அறிவித்துள்ளது.
கம்யூனிச நாடான சீனாவில் நடக்கும் விஷயங்கள் வெளி உலகிற்கு தெரியாமல் மர்மமாகவே இருக்கும். சீன அரசின் செயல்பாடுகள் அரிதாக மட்டுமே வெளிஉலகிற்கு தெரியும்.
சீனாவில் பலி எண்ணிக்கை அவர்கள் குறிப்பிட்டதை காட்டிலும் அதிகமாக இருக்கும் என கூறப்படும் நிலையில் தற்போது சீனாவில் பொது இடங்கள், திரையரங்குகள் திறக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது.
பெய்ஜிங் வர்த்தக விழாவில் இந்த தடுப்பு மருந்து பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. சிறிய கண்ணாடி குப்பிகளில் உள்ள இந்த தடுப்பு மருந்தின் வீரியம் குறித்து சீன விஞ்ஞானிகள் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.
இந்த தடுப்பு மருந்தை சீன நிறுவனங்களான சினோஒக் மற்றும் சினோபார்ம் ஆகியவை கண்டுபிடித்துள்ளன.
இன்னும் இந்த தடுப்பு மருந்து மூன்றாம் கட்ட பரிசோதனை செய்யப்படாத நிலையில் இது விற்பனைக்கு வர சில நாட்களாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பு மருந்து அங்கீகரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தால் ஒரு வருடத்துக்கு 300 மில்லியன் தடுப்பு மருந்துகள் இந்த நிறுவனங்களால் தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் உலக சுகாதார நிறுவனம் தடுப்பு மருந்து சோதனை குறித்து தொடர்ந்து பல நாடுகளிடம் எச்சரித்து வருகிறது.
அனைத்துவித சோதனைகளையும் முடித்து தடுப்பு மருந்து விற்பனைக்கு வர 2021 மே மாதம் ஆகலாம் என உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது.
மூன்று கட்ட பரிசோதனை செய்யப்படாமல் தடுப்பு மருந்தை விற்பனை செய்வது சரியல்ல என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. சீனாவில் ராணுவ விஞ்ஞானிகள் மற்றொரு தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா வைரஸின் மாறுபடும் டிஎன்ஏக்களுக்கு ஏற்ப இந்த தடுப்பு மருந்து கண்டறியப்பட்டுள்ளது என சீனா அறிவித்துள்ளது.