13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக எந்தவொரு தரப்பினரும் பேசவில்லை என யாழ். மாவட்ட ஒழுங்கிணைப்புக் குழு தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அரசாங்கம் சார்பில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட கருத்துக்களை முன்வைத்து வந்தாலும், 13 ஆவது திருத்த சட்டத்தில் ஒரு சில மாற்றங்கள் வந்தால் ஒழிய, அதனை முழுமையாக மாற்றுவதற்கு எந்த தரப்பினரும் பேசவில்லை.
13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதில் தான் உண்மையான நெருக்கடியை அரசாங்கத்தில் நாங்கள் காண்கின்றோம். 60 வீதமான நிதி மாகாண சபைகளுக்குத் தான் ஒதுக்கப்படுகின்றது.
நாட்டில் மாகாண சபைகள் ஊடாக பிரதிநிதித்துவப்படுத்துகின்றவர்கள் இல்லாத பட்சத்தில், ஆளுநர்கள் தான் 60 வீதமான நிதியைத் தீர்மானிக்கின்றார்கள்.
இதனை ஜனநாயகத்திற்கு எதிரான விடயமாக அரசாங்கம் பார்க்கின்றது. அந்த வகையில், மாகாண சபை தேர்தலை மிக விரைவில் நடத்த வேண்டும் என்ற அழுத்தத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.