உயர் பெறுபேற்றைக்கொண்ட சமூக அபிவிருத்தி திட்டங்களை (HICDP) இந்திய நிதியுதவியில் அமுல்படுத்துவதற்காக இந்தியா- இலங்கை இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று இலங்கை பிரதமர் கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்களின் பிரசன்னத்துடன் நேற்று செவ்வாய்க்கிழமை அலரிமாளிகையில் கைச்சாத்திடப்பட்டது.
2020 செப்டம்பர் 26 ஆம் திகதி இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடையில் இடம்பெற்ற மெய்நிகர் இருதரப்பு மாநாட்டில் HICDP திட்டங்களை அடுத்து வரும் ஐந்து வருட காலப்பகுதிக்கு நீடிப்பது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் திறைசேரி செயலாளர் எஸ் ஆர் ஆட்டிக்கல ஆகியோரால் கைச்சாத்திடப்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் உதவியாக HICDP திட்டங்களின் கீழ் 20 பில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான 64 திட்டங்கள் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இன்றைய தினம் கைச்சாத்திடப்பட்ட புதிய புரிந்துணர்வு உடன்படிக்கையின் திட்டவரைவுகளுக்கு அமைவாக ஆரோக்கியம், கல்வி, நீர், சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த சமூக ரீதியிலான ஒவ்வொரு பிரத்தியேக அபிவிருத்தித் திட்டங்களும் 300 மில்லியன் இலங்கை ரூபா வரையில் இங்கு முன்னெடுக்கப்படவுள்ளன. அதேவேளை இவ்வாறான திட்டங்களின் மொத்த பெறுமதியானது 5 பில்லியன் இலங்கை ரூபா வரையில் அதிகரிப்பதற்கான சாத்தியங்களும் உள்ளன.
இலங்கையின் 25 மாவட்டங்களில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் HICDP திட்டங்களை மேலும் விஸ்தரிப்பதற்கு மெய்நிகர் இருதரப்பு மாநாட்டின்போது இணக்கம் காணப்பட்டது. குறிப்பாக கல்வி, சுகாதாரம், விவசாயம் அல்லது சமூக அபிவிருத்தி துறைகள் சார்ந்த உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஊடாக சமூக பொருளாதார அபிவிருத்தி, வாழ்வாதார உதவிகள், சூழல் மற்றும் கலாசார மரபுரிமைகள் பாதுகாப்பு, பெண்களின் மேம்பாடு, சிறுவர் நலன்புரி மற்றும் சமூக வாழ்வுக்கான வசதிகள் ஆகியவற்றினை தொடர்புபடுத்தி இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்கமுடியும். நிதி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இலங்கை தரப்பில் HICDP திட்டங்கள் அமுல்படுத்தப்படுகிறது.
வடக்கு, வட மத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு, மத்திய, ஊவா, சப்ரகமுவா மற்றும் கிழக்கு ஆகிய இலங்கையின் சகல மாகாணங்களிலும் இதுவரை 21 திட்டங்கள் புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக ஆரம்ப பாடசாலைகள் மற்றும் கல்லூரிகள், தொழில் பயிற்சி மையங்கள், பல்கலைக்கழகங்கள், கிராமிய சுகாதார மையங்கள் போன்றவற்றை அமைத்தல், கலாசார மரபுரிமை, மழை நீர் சேமிப்பு திட்டம், ஏழைகளுக்கான சமூக வீடமைப்பு, விவசாய களஞ்சியங்கள், சுற்றுலாத்துறை மற்றும் சிவில் விமான போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட விடயங்களுக்கு ஆதரவு வழங்குவதற்காக இவ்வாறான திட்டங்கள் அமுல்படுத்தப்படுள்ளன.
இலங்கையின் தேவைகள் மற்றும் அபிவிருத்தி அபிலாஷைகளுக்கு பங்களிப்பு வழங்கும் நோக்குடன் இவ்வாறான திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் முற்றுமுழுதாக இலங்கை மக்களினதும் அரசாங்கத்தினதும் தேவைகளை அடிப்படையாக கொண்டிருக்கும் அதேசமயம் முன்னுரிமை அடிப்படையிலும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், இந்திய அரசாங்கத்தின் மற்றைய உதவி திட்டங்களைப்போலவே இத்திட்டங்களை அமுல்படுத்துவதில் ஏற்பட்டிருக்கும் நிர்வாக ரீதியான மற்றும் மேல் நிலை செலவுகள் அனைத்தும் இந்த திட்டங்களுக்கான செலவினங்களில் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை, அவை அனைத்தும் பிரத்தியேகமாக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையுடனான ஆழமான அபிவிருத்தி ஒத்துழைப்பினைச் சுட்டிக்காட்டும் வகையில் இந்த திட்டங்கள் அனைத்தும் இலங்கையின் பல்வேறு அமைச்சுக்கள் ஊடாக சிக்கனமான முறையில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பகிரப்பட்ட முன்னேற்றம் மற்றும் செழுமைத்தன்மை ஆகியவற்றுக்காக இலங்கை மக்களுடனும் அரசாங்கத்துடனும் இணைந்து இந்திய அரசாங்கம் செயற்பட வேண்டியதன் உறுதிப்பாட்டை இவ்வாறான உயர் பெறுபேற்றினை உடைய சமூக அபிவிருத்தி திட்டங்கள் பிரதிபலிக்கின்றன.
குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன்பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் மேற்கொண்ட உரையாடலின்போது இந்திய உயர்ஸ்தானிகர் அவர்கள், பிரதமர் அவர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன் அண்மையில் அலரிமாளிகையில் நடைபெற்ற நவராத்திரி பூஜைகள் தொடர்பாகவும் உரையாடியிருந்தார்.