கொரோனா வைரஸ் காரணமாக இன்று மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ராஜகிரிய பிரதேச முதியோர் இல்லத்தில் வசித்த 51 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 7ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட அவர் வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.
அவரது மரணத்திற்கான மிக அண்மித்த காரணியாக கொரோனா நிமோனியா தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் 23ஆம் திகதி அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அந்த வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.
அவரது மரணத்திற்கான காரணியாக கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட சுவாசக் கோளாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், கம்பஹா – உடுகம்பொல பிரதேசத்தை சேர்ந்த 63 வயதான பெண் ஒருவர், கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 9ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கான காரணியாக கொரோனா நிமோனியா தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அத்துடன், 55 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அவரது சடலம் கடந்த 8ஆம் திகதி பிரேத பரிசோதனைகளுக்காக கையளிக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மரணத்திற்கான காரணியாக கொரோனா தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது.