கொரேனாவைரசினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்படும் ஆபத்துள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களில் 20 வீதமானவர்கள் 90 நாட்களுக்கு மனோநலம் பாதிக்கப்பட்டுள்ளமை ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ள நிலையிலேயே விஞ்ஞானிகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
கொரோனாவிலிருந்து மீண்ட பின்னர் மனோநிலை பாதிப்பு உளநல பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள நோயாளிகள் மத்தியில் கவலை மனச்சோர்வு உறக்கமின்மை போன்றன காணப்பட்டுள்ளன என பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் டிமென்சாவினால் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் உளநல பாதிப்புகளை எதிர்கொள்வார்களோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது எமது ஆய்வு இதனை உறுதி செய்துள்ளது என ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக பேராசிரியர் போல் ஹரிசன் தெரிவித்துள்ளார்.
உலகநாடுகளின் மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் இதற்கான காரணத்தை உடனடியாக கண்டுபிடித்து புதிய சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
எங்களின் ஆராய்ச்சி உண்மையில் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் குறித்த எண்ணிக்கையை சரியாக வெளிப்படுத்தவில்லை என்பதால் மருத்துவ உலகம் இந்த பிரச்சினைக்கு தீர்வை காண தயாராகயிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 69 மில்லியன் மக்களின் சுகாதார ஆவணங்களை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு இடம்பெற்றுள்ளது. இவர்களில் 62,000 நோயாளிகளும் காணப்பட்டுள்ளனர்.
இதன்போது கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களில் ஐந்தில் ஒருவர் மூன்று மாதங்களில் பதற்றம் விரக்தி உறக்கமின்மை போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.